புதுடெல்லி:
டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும் என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆட்டோ உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறுபதா வது ஆண்டு விழாவில், டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும், நெடுஞ்சாலையில் புதிய ஆட்டோமொபைல் தொழில்துறை கிளஸ்டர் களை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ உபகரண உற்பத்தியாளர் சங்கத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளதாவது: டெல்லி மும்பை நெடுஞ்சாலையில் ஆட்டோமொபைல் தொழில் துறை நிறுவனங்களை உருவாக்க நாங்கள் உங்களுக்கு இடத்தை தர தயாராக உள்ளோம், நெடுஞ்சாலை வழியாக உள்ள குருகிராம் அல்லது பெரிய நகரங்களில் ஒரு ஏக்கர் இடம் 2 கோடி அல்லது 2.5 கோடி மதிக்கத்தக்கது, ஆனால் நெடுஞ்சாலைகளில் உள்ள ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம் போன்ற இடங்களில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை 10 லட்சம் அல்லது 15 லட்சமாகும்.
தேசிய தலைநகரான டெல்லியை இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையுடன் சேர்க்கும் 1,380 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுமானம் 2024 ஆம் ஆண்டு முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போது 2022ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.
இந்த நெடுஞ்சாலை சோனா நகரத்தில் தொடங்கி, சாவாய், மஹத்பூர், ஆல்வார், ஜபர், ரத்லம், வதோதரா வழியாக மும்பை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாக ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்மார்ட் கிராமங்களை நாங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
துறைமுகங்களான முந்த்ரா மற்றும் கண்டலாவும் ரயில்வே மற்றும் விமான நிலையங்களுடன் இந்த நெடுஞ்சாலையை இணைக்கும், மேலும் நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு போன்ற பிற துறைகளும் இந்த நெடுஞ்சாலையுடன் நன்கு இணைக்கப்படும். எனவே இது வாகன கூறு நிறுவனங்களுக்கான தளவாட செலவை குறைக்கும்.
உலகில் இந்தியா தற்போது இரண்டாவது நீண்ட சாலைகளைக் கொண்ட இடமாக மாறியுள்ளது, 2018 -19 ஆம் ஆண்டில் சாலை கட்டுமானத்தின் சராசரி வீதம் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டராக இருந்தது. ஆனால் அது தற்போது 40 கிலோ மீட்டராக மாறியுள்ளது என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.