தில்லி: தனது வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட இளம் தொழிலதிபர் போட்ட திட்டம் கலைந்தது. 28 வயதான மிண்டூ குமார் எனும் வாலிபர் தான் வாடகைக்கு எடுத்த ஒரு காரை இணையதளத்தில் (இ-காமர்ஸ் தளம்) கார் உரிமையாளர் போல் நடித்து விற்றுள்ளார். அவர் போலி ஆவணங்களைத் தயார் செய்து காரினை விற்று, அதன்பின் புதிய உரிமையாளரிடமிருந்து அதே இரவில் அதைத் திருடியதால் கைது செய்யப்பட்டார்.
பி.சி.ஏ. பட்டதாரியான மிண்டூ குமார் ஃபரிதாபாத்தில் ஒரு மசாஜ் பார்லர்/ ஸ்பா நடத்திவந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஒரு கார் திருட்டு பற்றித் துவாரகா 23 பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இவரிடமிருந்து கார் வாங்கிய புதிய உரிமையாளர் கொடுத்த விவரங்கள் தில்லியைச் சேர்ந்த ஒருவரின் மஹிந்திரா XUV கார் எனத் தெரிந்ததும் போலீஸார் திகைத்தார்கள்.
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த காவல்அதிகாரி, ” காரின் புதிய உரிமையாளர் பொய் கூறவில்லை. அதே இரவு அவரது கார் திருடப்பட்டது உண்மை. ஆரம்பத்தில் நாங்கள் அவரிடம் ஒரு திருடப்பட்ட வாகனம் விற்கப்பட்டது என நினைத்தோம். அதன் பின்னர், காரை விற்றவரே புதிய உரிமையாளரிடமிருந்து காரைத் திருடியிருக்கலாம் என சந்தேகப்பட்டோம். எனவே ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம்” எனக் கூறினார்.
போலீஸ் விசாரணையின் போது, திருடிய நபர் அதே வண்டியை மீண்டும் இணையத்தளத்தில் விற்க முயற்சி செய்தபோது போலிசார் பொறி வைத்து மிண்டூவை கைது செய்தனர்.
மிண்டூ பரிதாபாத்தில் ஒரு மசாஜ் பார்லர்/ ஸ்பா தொழில் செய்ததில் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மஹிந்திரா XUV காரை வாடகைக்கு எடுத்தார். பிறகு, அதே நிறத்தில் ஒரு காரினைத் தேடி அந்தக் காரின் விவரங்களை சேகரித்தார். அந்த விவரங்களைக் குறிப்பிட்டு ஒரு போலி ஆர்.சி. ஆவணத்தை தயார் செய்தார்.
இணையதளத்தில் பதிவிட்டு ஒருவரிடம் அந்தக் காரை விற்றார். காரை விற்ற அதே நாள் இரவில், தன்னிடம் இருந்த மாற்றுச்சாவியைப் பயன்படுத்தி காரைத் திருடினார். மீண்டும் அதேப் போல் இன்னொருவரிடம் விற்க முயன்ற போது போலிசில் சிக்கினார். மிண்டூ காரை விற்றப் பிறகு ஏழு மணி நேரம் கழித்து ஜிபிஎஸ் வசதி யுடன் காரின் இருப்பிடம் தெரிந்துகொண்டு கார் திருடியதாக ஒப்புக்கொண்டான்.