டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒரு வழியாக கட்டுக்குள் வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. ஆகையால், மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில் டெல்லியில் மீண்டும் லாக் டவுனை அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் லாக்டவுன் மட்டுமே தீர்வல்ல.
சிறந்த மருத்துவ வசதிகளே இதற்கு தீர்வாக இருக்க முடியும். அந்த வகையில் டெல்லி அரசானது சிறப்பான மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது என்று கூறினார்.