டெல்லி: டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆம்ஆத்மி கட்சியும், அமலாக்கத்துறையினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் டெல்லி மாநிலஅரசியலில் சடுகுடு ஆட்டம் ஆடி வருகிறது.
கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி நடப்பதாக, ஆத்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டுக்களை கூறி உள்ள நிலையில், அதை மறுத்துள்ள அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் வேண்டுமென்றே, ஜாமின் பெறும் நோக்கில் அகில அளவிலான பழங்களை எடுத்துக்கொள்கிறார் என்று மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி மர்லினா குற்றஞ்சாட்டி உள்ளார். கெஜ்ரிவால், 2024 மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்ட நிலையில், அவர்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கூறி நீதிமன்றம், அவரது ஜாமினை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால், சகல வசதிகளுடன், ஏப்ரல் 1ஆம் தேதியில் திகார் ஜெயிலில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ வசதி, வீட்டு சாப்பாடு உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
முன்னதாக டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நேற்று ( ஏப்.,18) விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மருத்துவ வசதி கேட்டும், மருத்துவரிடம் வீடியோ கால் மூலம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாது என அமலாக்கதுறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதி மறுக்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண் அமைச்சர் அதிஷி மர்லினா குற்றம் சாட்டி உள்ளார். மேலும், கெஜ்ரிவலை கொல்ல சதி நடப்பதாக கூறிய அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 30 ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வருகிறார். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க அவர் தினமும் 54 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்கிறார். எந்த டாக்டரிடம் கேட்டாலும், இவ்வளவு தீவிரமான சர்க்கரை நோய் உள்ளவர்தான் இவ்வளவு இன்சுலின் எடுத்துக் கொள்வார் என சொல்வார்கள்.
அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப உணவை சாப்பிடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது என்று கூறியவர், “மூன்று தேர்தல்களில் (டெல்லி சட்டசபை தேர்தல்) அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவால் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, அவரை சிறையில் அடைத்து கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது, பாஜக அரசு, அதன் துணை அமைப்பு (ED) மூலம் கெஜ்ரிவால்ஜியின் உடல்நிலையை கெடுக்க முயல்கிறது. ED மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “சர்வாதிகாரத்துக்கும் எல்லை உண்டு. சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தருவது நிறுத்தப்பட்டுள்ளது. 30 வருட சர்க்கரை நோயாளி அரவிந்த் கெஜ்ரிவால். தினமும் 54 யூனிட் இன்சுலின் எடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300ஐ எட்டியது. இது கவலைக்குரிய விஷயம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு;ககள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், சிறையில் உள்ள கெஜ்ரிவால், நீரிழிவு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் உணவை சாப்பிடாமல், சிறையில் இனிப்பு, மாம்பழம் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிடுகிறார்’. வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கப் பார்க்கிறார்’, இதன்மூலம், உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜாமின் பெற முயற்சிக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூஹைப் ஹூசைன், கெஜ்ரிவால், உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை எடுத்துக் கொள்கிறார். கெஜ்ரிவாலின் உணவுப்பட்டியலை நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்து உள்ளோம். வழக்கமான நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்வது இல்லை. அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற முயற்சி செய்கிறார் என கூறினார்.
கெஜ்ரிவாலை வைத்து ஆம்ஆத்மியும், பாஜகவும் அரசியல் செய்து வருகிறது.