அமராவதி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி பின்னர் அப்ரூவராக மாறிய ராகவா ரெட்டியின் தந்தை சீனிவாசலு ரெட்டி, பாஜக கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். ராகவா ரெட்டி நிறுவனம், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய பிறகு, ரூ.30 கோடி  பாஜகவுக்கு தேர்தல் நிதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளது. அதேவேளையில், தேர்தல் கூட்டணி, வேட்புமனுத் தாக்கல்,  கட்சிகளுக்கு ஆதரவு, தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக்கட்சியில் சேர்ந்து சீட் பெறுவது போன்ற அவலங்களும் அரங்கேறி வருகின்றன. இதுமட்டுமின்றி, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள குற்றவாளிகள் முடிச்செருக்கிகள், மொள்ளமாரிகளும் ஆளும் அரசியல் கட்சிகளில் சேர்வதும் வாடிக்கையாகி வருகிறது. இவ்வாறு சேர்பவர்களுக்கு உடனே அந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதும்,  முக்கிய பதவிகள் கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நாட்டை உலுக்கி வரும் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க காரணமான, மதுபான கொள்கை முறைகேட்டில், அப்ரூவராக மாறிய பிரபல மதுபான தொழிலதிபரான ராகவா ரெட்டியின் தந்தை பாஜக கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சியில் இணைந்த நிலையில், அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2023 பிப்ரவரியில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி பின்னர் அப்ரூவராக மாறி ஜாமீனில் வெளியே வந்த மதுபான தொழிலதிபரான ராகவா ரெட்டி,  கடந்த பிப்ரவரி மாதம் தனது தந்தையுடன் சேர்ந்து, ஏற்கனவே இருந்து வந்த  YSR காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் (TDP) கட்சியில் சேர்ந்த நிலையில்,  தற்போது ராகவா ரெட்டியின் தந்தை சீனிவாசலு ரெட்டிக்கு  அக்கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட  சீட் கொடுத்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்க இயக்குனரகம் (ED) பாலாஜி டிஸ்டில்லரீஸ் வைத்திருக்கும் தந்தை-மகன் இரட்டையர்கள், ‘சவுத் குரூப்’ இன் ஒரு பகுதியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது, அதன் உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு செலுத்தப்பட்ட கிக்பேக்குகளுக்கு ஈடாக டெல்லி கலால் கொள்கையின் கீழ் தேவையற்ற பலன்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை, ராகவா ரெட்டி, சீனாவாசலு ரெட்டியை விசாரித்தது. ஆனால், ராகவா ரெட்டி கைது செய்யப்பட்டார். பின்னர் அப்ரூவராக மாறியதால் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதே வேளையில்,  சீனிவாசலு ரெட்டியை ED விசாரித்தது, ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கான முன்னாள் முதல்வரின் மகள் கவிதா  கைதுக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக கருதப்படுபவர் ராகவா ரெட்டி, அவரது வாக்குமூலத்தை தொடர்ந்தே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் கைத தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரவிந்த் கெஜ்ரிவால் ராகவாரெட்டியின் பெயரை குறிப்பிட்டு வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது