வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பேரழிவை சந்தித்து வருகிறது.

ஹரியானா-வில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர் கிளை ஆறுகள் வழியாக யமுனை ஆற்றில் கலந்ததால் யூனியன் பிரதேசமான டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 207.25 மீட்டராக இருந்த நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு 207.55 மீட்டரை அடைந்தது.

இதற்கு முன் யமுனை ஆற்றில் அதிகளவாக 1978 ம் ஆண்டு செப்டம்பர் 6 ம் தேதி 207.49 மீட்டர் உயரத்துக்கு கரைபுரண்டு ஓடியது.

இந்த நிலையில் வரலாற்றில் இல்லாத அளவாக இன்று இரவு 8 மணி நிலவரப்படி யமுனை ஆற்றில் 207.89 மீட்டராக ஆற்று நீர் உயர்ந்துள்ளதை அடுத்து டெல்லியில் வெள்ள பாதிப்பு அபாயம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து வெள்ள அபாயம் குறித்து டெல்லி பேரிடர் நிர்வாக ஆணையத்துடன் துணை நிலை ஆளுநர் வி கே சக்சேனா நாளை காலை ஆலோசிக்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.