டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றின் இரு அறிகுறிகளான அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் அவர் ஜூன் 16 அன்று அவர் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வில்லை. ஆனால் 2வது முறையாக நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷியும் இன்று கொரோனா சோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட இப்போது வீட்டில் தனிமையில் உள்ளார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் அக்ஷய் மராத்தேவும் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மக்களுக்காக உங்கள் ஆரோக்கியத்தையும் பார்க்காமல் 24 மணிநேரமும் உழைத்தீர்கள், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். டெல்லியில் மட்டும் கிட்டத்தட்ட 45,000 கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,837 ஆகும்.