டில்லி

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழியாகத் தடுப்பூசியை மட்டுமே அனைவரும் கூறி வருகின்றனர். தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.   இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் நிபுணர்கள் அடுத்த மூன்றாம் அலை கொரோனா பரவலும் இருக்கும் எனவும் அதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிகவும் பாதிப்பு அடைவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.  எனவே பல நாடுகளிலும் 2-18 வயதான சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் சோதனை மும்முரமாக நடந்து வருகிறது.  இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது.

பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கோவாக்சின் தடுப்பூசியை 2-18 வயது உள்ளோருக்குச் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது.  அதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    இந்த மனுவை டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது.

மனுதாரர் சார்பில், “தடுப்பூசி மருத்துவ பரிசோதனைக்கு அதற்கு உட்படும் ஆர்வலர்கள் அனுமதி அவசியம் ஆகும்.  அத்துடன் அந்த சோதனை நடத்தும் நிறுவனத்துடன் பல விவகாரங்களில் ஆர்வலர்கள் ஒரு ஒப்பந்தம் இட வேண்டும்.  இந்த சோதனையில் சோதிக்கப்படுவோர் 2-18 வயதுக்குப்பட்டோர் என்பதால் அவர்களால் எவ்வித ஒப்பந்தமும் இட முடியாது.  அனைவரும் மைனர்கள் என்பதால் அவர்கள் சம்மதமும் செல்லாது” என வாதிடப்பட்டது.

எனவே இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதுவரை சோதனைகளை ஒத்தி வைக்க இடைக்கால உத்தரவு இடுமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.  அவ்வாறு உத்தரவிட டில்லி  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.