டில்லி

டில்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவால் அரசுக்கு எல்லோருடனுமே சண்டைதான் என தெரிவித்துள்ளது.

டில்லி யூனியன் பிரதேசத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைஐயில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.   இந்த ஆட்சியின் மீது டில்லி அரசு ஊழியர்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது.   சமீபத்தில் டில்லி மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளர்களில் சிலர் தங்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை எனக் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர்.  இதனால் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படவில்லை.

இதை  எதிர்த்து மோனிகா அரோரா என்னும் டில்லி வாசி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.  அதில் அவர் டில்லி மாநகராட்சி ஊழியர்களில் சிலர் குப்பை அள்ளுவது போன்ற பணிகளை ஈடுபடாததால் குப்பை தேங்கி உள்ளதாக கூறி இருந்தார்.  இந்த வழக்கு கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரிக்கப் பட்டது.   நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், “உங்கள் (கெஜ்ரிவால்) அரசு இதுவரை சண்டையிடாதவர்களே இல்லை.  அது மத்திய அரசானாலும் சரி, டில்லி மாநகராட்சியானாலும் சரி, எல்லாரிடமும் சண்டைதான்.   உங்களுக்கு உண்மையாகவே பொது நலன் மீது அக்கறை இருந்தால் மாநகராட்சி ஊழியர்களை வேலை செய்ய விடுங்கள்.   உடனடியாக ஊதிய நிலுவைத் தொகையை கொடுத்து விடுங்கள்.

மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.   டெங்கு போன்ற நோய்கள் பரவி வரும் வேளையில் குப்பைகளை சேர்ப்பது சுகாதாரக் கேடு ஆகும்.   எந்தக் காரணத்துக்காகவும் துப்புறவுப் பணிகளை நிறுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டில்லி அரசு தற்போது மாநகராட்சிக்கு இந்த விவகாரத்தில் முழுக் கவனம் செலுத்துமாறு கூறி உள்ளது.  மேலும் துப்புறவுத் தொழிலாளர்களின் குறைகளைக் களைந்து அவர்கள் பணிக்கு திரும்ப ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.