டெல்லி: முன்னாள் ராஜ்யசபா எம்பியும், பாஜகவின் மூத்த தலைவருமான  சுப்பிரமணியன் சுவாமி 6 வாரத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படும் எம்.பி.க்களுக்கு, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையில், அரசு பங்களாக ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த பங்களாக்களில் வசிக்கும் எம்.பி.க்கள் பலர் தங்களது பதவி காலம் முடிந்ததும், அதை காலி செய்ய மறுத்து வருகின்றனர். இதனால் புதிதாக தேர்வாகி வரும் எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.  இதுதொடர்பாக அதிகாரிகள் பலமுறை முன்னாள் எம்.பி.க்களுக்கு நினைவூட்டினாலும் பலர் காலிய செய்ய மறுப்பதால், நீதிமன்றங்களை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்று பல வழக்குகள் தொடரப்பட்டு, சரத்யாதவ், பிரியங்கா காந்தி, அம்ரீந்தர்சிங், தேஜஸ்வியாதவ் என பலர் காலி செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டனர். இந்த நிலையில், தற்போது எம்.பி.யாக இல்லாத பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து வந்தார்.

இதுதொடர்பாக அவர்மீது, டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுப்பிரமணியன்சாமி, ஆறு வாரங்களுக்குள் அரசு பங்களாவை காலி செய்துவிட்டு,  எஸ்டேட் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.