டில்லி

ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஆதார் அவசியம் இல்லை என டில்லி அரசின் துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் நாடெங்கும் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் என்னும் விற்பனைப் புள்ளி கருவியின் மூலம் பில் வழங்கப்பட்டு வருகிறது.    இந்த கருவி ஆதார் எண் இணைக்கப்பட்ட ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே பில் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.   அதனால் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை உண்டானது.

டில்லியில் இந்த வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 2254 கடைகளில் இந்த கருவி மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.     ரெஷன் பொருட்களை திருடி கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது.    ஆனால் அப்படி இருந்தும் ரேஷன் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பது நிற்கவில்லை எனவும்,  ஆதார் இல்லாத பல பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன.   டில்லீயில் சுமார் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு தற்போது ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை என சொல்லப்படுகிறது.

அதையொட்டி  டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.   கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, “அரசு திருட்டை தடுக்க இந்த் ஆதார் இணைப்புடன் கூடிய விற்பனைப் புள்ளி கருவியை வழங்கியது.     ஆயினும் திருட்டும் தொடர்கிறது, அத்துடன் பல பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் உள்ளது.   அதனால் இனி ரேஷன் பொருட்களைப் பெற ஆதார் அவசியம் இல்லை என அறிவிக்கப்படுகிறது”  என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.