டில்லி

வீடு தேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு டில்லி கவர்னர் பைஜால் அனுமதி அளித்துள்ளார்.

அரசால் வழங்கப்படும் திருமண பதிவு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு தற்போது அலைய வேண்டி உள்ளது.     இதனால் வயதானவர்கள்,  ஊனமுற்றோருக்கு பல துயரங்கள் உண்டாகின்றது.   பலரும் தங்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துகொள்வதால் ஊதிய இழப்பும் உண்டாகிறது.

இந்த நிலையை மாற்ற அரசு சேவைகளை பயணிகளின் வீட்டிற்கே சென்று அளிக்க ஒரு புதிய திட்டத்தை டில்லியில் உள்ள கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்தது.   கடந்த நவம்பரில் இது டில்லி சட்டசபை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றது.    டிசம்பர் மாதம் இந்த சட்ட திருத்தம் பற்றிய கோப்புகள் டில்லி துணை நிலை ஆளுனர் பைஜாலிடம் அளிக்கப்பட்டது.

முதலில் அவரால் நிராகரிக்கப்பட்ட இந்த திட்டம் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் பயனாளிகள் இனி தங்கள் அடையாளத்தை பயோமெட்ரிக் முறையில் உறுதி செய்து  திருமண பதிவு சான்றிதழ்,  ஜாதி சான்றிதழ், ரேஷன் பொருட்கள் உட்பட 40 சேவைகளை வீட்டில் இருந்த படியே பெற முடியும்.

ஆளுனரின் இந்த முடிவுக்கு முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.