டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக 9முறை சம்மன் அனுப்பியும் ஆஜராக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில், அவர் சிறையில் இருந்து ஆட்சி செய்வார் என ஆம்ஆத்மி கூறியது. ஆனால், சிறையில் இருந்து ஆட்சி செய்ய முடியாது என்று டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்து உள்ளார்.
ஒரு மாநில முதல்வர், அமலாக்கத்துறையினரால் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவது தொடர்பாக நமது நாட்டின் அரசியல் சாசன சட்டத்தில் முறையான விதிகள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. உயர்பதவில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் தனது ப தவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை என்றும், சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவதைத் தடுக்கும் எந்தச் சட்டமும் இல்லை என்றும் சட்டவியலாளர்கள் கூறுகின்றனர்.
அரசியல் சட்டவிதிகளின்படி, குற்றம் நிரூபிக்கப்படும் முன், எந்த ஒரு அரசியல் தலைவரும் முதல்வர், அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. போன்ற பதவிகளில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், சிறையில் இருக்கும்போதும் ஆட்சியை வழி நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்றால் மட்டுமே அவர்கள் பதவி விலகலாம், அதற்கு முன்பாக பதவி விலக வேண்டியது இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார் இதை சுட்டிக்காட்டிதான் ஆம்ஆத்மி கட்சி, முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி நடத்துவார் என்று கூறி வருகிறது. . டெல்லி முதல்வர் மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டு உள்ளார். ‘சிறையிலிருந்து ஆட்சி’ என்ற திசையில், அவர் நீர் மற்றும் சுகாதாரத் துறைக்கான இரண்டு உத்தரவுகளை வழங்கியதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால், சிறையில் இருக்கும் முதல்வரால், அமைச்சரவைக் கூட்டங்கள், துறைகளின் செயல்பாடு, கோப்புகளில் கையெழுத்திடுதல் போன்ற பல முக்கியப் பணிகளை சிறையில் இருந்துக்கொண்டே செய்வது சாத்தியமில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் கெஜ்ரிவால் சில வேலைகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். சிறையில் இருந்துக்கொண்டு அரசு பணிகளை மேற்கொள்ள சிறை விதிகளில் இடமில்லை என்று கூறப்படுகிறது. மேலும், காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எந்த கோப்பிலும் கையெழுத்திட இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்றும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என பாஜக போராட்டம் நடத்தியது. அதையடுத்து இது தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பாஜக புகார் அளித்தது. மேலும், கெஜ்ரிவால் உத்தரவிட்டதாக ஆம்ஆத்மி அமைச்சர்கள் கூறிய அந்த உத்தரவுகள் போலியானது என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா, கெஜ்ரிவால் சிறையிலிருந்து அரசாங்கம் நடத்த முடியாது என்று உறுதி கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, “டெல்லி மக்களுக்கு என்னால் ஒரு உத்தர வாதத்தை அளிக்க முடியும். அது சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது” என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, லெப்டினன்ட் கவர்னரிடம், டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்குமா? எனக் கேட்டதற்கு, இல்லை எனத் திட்டவட்டமாக துணைநிலை ஆளுநர் பதிலளித்தார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் இந்த கருத்தால், டெல்லி அரசாங்கத்திற்கும் ராஜ்பவனுக்கும் இடையே ஒரு புதிய மோதலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.
சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதற்கு டெல்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் மிக முக்கியமான விஷயம் என்று சில அரசியல் நிபுணர்கள் கூறினர். சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, அரசியல் சாசன வல்லுநர்கள் கூறுகையில், எல்ஜி விரும்பினால், எந்தவொருக் கட்டிடத்தையும் சிறையாக அறிவித்து, அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து, அங்கிருந்து அரசுப் பணிகளைப் பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கலாம். இருப்பினும், எல்ஜி இதை செய்யப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.