டில்லி
டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா இல்லம் தாக்கப்பட்டதற்கு பாஜக பொறுப்பு என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
இன்று டில்லியில் உள்ள டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் இல்லம் தாக்கப்பட்டது. இந்த நிகழ்வு தலைநகரில் கடும் பரபரப்பை ஏற்பட்டது. இதையொட்டி வழக்குப் பதிந்துள்ளதாகவும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்த நிகழ்வுக்கு டில்லி காவல்துறையினர் உதவியதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறி உள்ளனர்.
ஆம் ஆத்மி தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், “துணை முதல்வர் அவருடைய இல்லத்தில் இல்லாத நேரத்தில் பாஜக தொண்டர்கள் என கூறிக் கொள்ளும் பாஜக குண்டர்கள் அவருடைய இல்லத்தைத் தாக்கி உள்ளனர். அப்போது இல்லத்தில் பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர்” என செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.
இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில், “துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது நடந்த கொடூர தாக்குதலுக்கு நான் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். அவர் வீட்டில் இல்லாத போது காவல்துறையினர் முன்னிலையில் இந்த தாக்குதலைக் குண்டர்கள் நடத்தி உள்ளனர். டில்லியில் ஏன் பாஜக தினமும் இவ்வாறு நடந்துக் கொள்கிறது?” எனப் பதிந்துள்ளார்.