ஷார்ஜா: டெல்லி அணி நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கை விரட்டிப் பிடிக்க நினைத்த கொல்கத்தா அணி, இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கத்தாவிற்கு எதிரான முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 228 ரன்களை குவித்துவிட்டது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் & பிரித்வி ஷா ஆகியோர் சூப்பர் அரைசதங்களை அடித்தனர்.
பின்னர், மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்கமும், நடுப்பகுதி ஆட்டமும் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. அந்த அணியின் நிதிஷ் ரானா 58 ரன்களும், இயான் மோர்கன் 18 பந்துகளில் 44 ரன்களும், ராகுல் திரிபதி 16 பந்துகளில் 36 ரன்களும் அடித்தனர்.
இயான் மோர்கன் – ராகுல் திரிபதி இணை, களத்தில் இருந்தவரை கொல்கத்தா அணி வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தவுடன் நிலைமை மாறிவிட்டது.
கடைசி ஓவரில் கூட, கொல்கத்தா வெற்றிபெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த ஓவர் டெல்லி அணிக்கு சிறப்பான ஓவராக அமைந்தது. இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களையே எடுத்து, கெளரவமாக தோற்றது கொல்கத்தா அணி.
டெல்லி தரப்பில், நார்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ரபாடா 4 ஓவர்களில் 51 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 4 ஓவர்களில் 46 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.