டில்லி:

டில்லியில் ஒரே அறையில் செயல்பட்டு வந்த தனியார் லாக்கர்களில் இருந்து கடந்த 13ம் தேதி மட்டும் ரூ. 21 கோடியை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களாக இது போன்று ரூ. 85 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளை 41 லாக்கர்களில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தனியார் லாக்கர்களை ஒழுங்குபடுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மூலம் கருப்பு பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. கருப்பு பண முதலைகள், வழக்கமான வங்கி லாக்கர்களில் இருப்பு வைப்பதை தவிர்த்து கணக்கில் வராத ரொக்கம், தங்க நகைகளை தனியார் லாக்கர்களில் பதுக்கி வைத்துள்ளனர்.

தெற்கு டில்லி விஸ்தரிப்பு பகுதியில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் கட்டணம் என்ற அடிப்படையில் 100 லாக்கர்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வங்கிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைக்கிறது.

வங்கிகளில் கண்காணிப்பு அதிகரித்து வருவதால் இதை தவிர்த்துவிட்டு தொழிலதிபர்கள், வியாபாரிகள் கணக்கில் கொண்டு வரப்படாத ரொக்கம், தங்க நகைகளை ஒழுங்குமுறை இல்லாத தனியார் லாக்கர்களில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பணம் பெரும்பாலும் குட்கா மற்றும் மதுபான வியாபாரிகளுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

தனியார் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெபாசிட்கள் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்னர் நடந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ. 40 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்பு டில்லி கோனாகட் பகுதியில் உள்ள தனியார் லாக்கர்களில் அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 10 கோடி கைப்பற்றப்பட்டது. லாக்கர்களின் உரிமையாளர்கள் ஏற்கனவே ஒரு முன்னணி தனியார் வங்கியின் 3 கிளைகளில் ஆயிரம் கோடி ரூபாயை டெபாசிட் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை இறக்குமதி வரவாக வெளிநாடுகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த தொகை முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என்பதும் தெரியவ ந்தது. இந்த லாக்கர் சேவை நிர்வாகங்களும் கேஒய்சி ஆவணம் எனப்படும் வாடிக்கையாளரை பற்றி அறிந்து கொள் என்ற வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இது போன்ற சேவைகள் இதர மெட்ரோ நகரங்களில் செயல்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தனியார் லாக்கர் சேவை நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை நிதியமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. அவை வங்கிகளை போல் கேஒய்சி விதிமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.