டில்லி

பொய்யான வாக்குறுதி அளித்து விளம்பரம் செய்ததாக டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது டில்லி நீதிமன்றம் வழக்கு பதிந்துள்ளது

குருகிராம் பகுதியில்,  ஹோம்ச்டெட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் என்னும் ஒரு கட்டிடம் கட்டும் நிறுவனம் குடியிருப்புக்களை கட்டித்தருவதாக பலரிடம் இருந்து பணம் வாங்கி உள்ளது  மேலும் இந்த கட்டிட வேலைகள் 2016ஆம் வருடம் முடிவடைந்து குடியிருப்புகள் ஒப்படைக்கப்படும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது.   ஆனால் இன்று வரை அந்த கட்டிட வேலைகள் முடியவில்லை.

இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில்,  ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தோன்றி உள்ளார்.  மேலும் அவர் கட்டிடங்கள் முடிக்கப்படும் தேதிகள் பற்றியும் விளம்பரத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.   நேரத்தில் கட்டிட வேலைகள் முடிக்காததற்காக பாவனா அகர்வால் என்னும் பெண் டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது வழக்கு மனுவில்  ”இந்த நிறுவனம் மரியா ஷரபோவாவை வைத்து விளம்பரம் செய்தது.  அதில் கவரப் பட்டு எங்களைப் போல் பலர் இந்த நிறுவனத்தில் குடியிருப்புகள் பதிவு செய்தோம்.   அதுமட்டுமின்றி மரியா பலமுறை இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளில் பங்கு பெற்று இந்த நிறுவனத்தை புகழ்ந்துள்ளார்.  அத்தோடு 2016க்குள் கட்டிட வேலைகள் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.   ஆகவே அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்.   அவரால் தான் என்னைப் போல் சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்தோம்” எனக் கூறி உள்ளார்.

இதையொட்டி நீதிமன்றம் அந்த கட்டிடம் கட்டும் நிறுவனம் மீதும் மரியா சரபோவா மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.   மேலும் அந்த நிறுவனம் சரியான உரிமம் பெறாததால் தான் கட்டிட வேலைகளை முடிக்க வில்லை என தெரிய வருவதால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.