சென்னை:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று கமல்ஹாசன் செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது,  கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத் தலைமுறை யிடம் ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து பாரதியின் பாடலை நினைவு கூர்ந்த கமல், மோடி தலைமையிலான மத்தியஅரசை கடுமையாக சாடினார்.

அவர் கூறியதாவது,

தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது, சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ் வென்றும் மேலன்றும் சொல்வார் நீதிப்பிரிவுகள் செய்வார் – அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு தன்னில் செழித்திடும் வையம்.

102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது.

இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கும் பொழுது அதை தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி.

சரி பாதி விழுக்காடான பெண்கள், வயது பாரபட்சமின்றி உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் சட்டத்தின் மூலம் அதை தெளிவிக்காமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளை செய்வது அரசு மக்களுக்கு எதிராக தொடுக்கும் போர் வியூகம்.

எதிர்காலத்தின் தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கையில் கண்ணீர்புகைக்குண்டுகள் எறிவதும், காக்கிகளைக் கொண்டு அடிப்பதும்தான் அரசாங்கத்தின் பதில்.

பெட்ரோலின் விலை ரூபாய் 70ஐ தொட்ட போது குஜராத்தில் கோடிகள் நஷ்டமாகும் என கொதித்தவர் ஆளும் போது நாட்டில் பெட்ரோலின் விலை78. பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, விலைவாசி விண்ணோக்கி சென்று கொண்டிருக்கிறது.

.என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கான அவசரம் என்ன என்கிற கேள்வி தான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே.

பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை,இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?ஆண்டாண்டு காலமாக தமிழகம் தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கை தமிழருக்கு நாம் சொல்ல போகும் பதில் என்ன?முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தின் போது தப்பித் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை என்ன?

கேள்விகளுக்கு விடையளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலை தான் டெல்லியிலும், அலிகரிலும், அஸ்ஸாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜன நாயகம் வழங்கிய கருத்துரிமையின் மேல் விழும் அடி.

கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத்தலைமுறையிடம் ஏற்படுத்த விழும் அடி.  கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி.

மாணவனுக்கு பதிலில்லை. விவசாயிக்கு வாழ வழியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை.

வேலை வாய்ப்பு இல்லவே இல்லை.

எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை. இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது.

இனத்தின் பெயரால் நாட்டை பிரித்த புதிய நாடு பிறந்து விடும் என ஆசை வார்த்தை பேசி,சட்ட திருத்தங்களை தனக்கு சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உள்ளது.  அந்த வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில் தான் இருந்திருக்கிறது.

அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன். நாம் யாருமே ஓயக்கூடாது .

நம் படையோடு மோத வழியில்லை என்று தெரிந்து கொண்டு,நம் கால்களுக்கிடையில் பாம்புகளை விடுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படும் படையல்ல எங்கள் இளைஞர் கூட்டம் என்பதை உரக்க சொல்ல வேண்டிய நேரமிது.

சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி தான் எழ வேண்டும். கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பிணிகளை. தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது.

உங்கள் நான்..

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.