டெல்லி:

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 6.26 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி தங்களது வாக்குகளை செலுத்தினர்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்..  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகளை பதிவு செய்தனர். புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சாந்தினி சவுக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர்.

10 மணி நிலவரப்படி 4.33 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி அளவில் 6.28 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.