டில்லி
டில்லியில் புழுதிப் புயல் வீசும் போது 3 ஆம்புலன்சுகள் தீப்பிடித்து இருவர் மரணமும் ஒருவர் 90% தீக்காயமும் அடைந்துள்ளனர்.
டில்லி நகரம் கடுமையான புழுதிப் புயலால் சேதம் அடைந்துள்ளது. இந்நகரின் ஷேக் சராய் பகுதியில் மருத்துவமனை வெளியே நின்றுக் கொண்டிருந்த ஆம்புலன்சில் திடீரென தீப்படித்தது. இந்த ஆம்புலன்சில் பின் இருக்கையில் இருவரும் முன் இருக்கையில் ஒருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த தீவிபத்தில் பின் இருக்கையில் இருந்த இருவரும் உயிர் இழந்துள்ளனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் 90% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழுதிப் புயல் காரணமாக அடுத்து நிறுத்தப்பட்ட மேலும் இரு ஆம்புலன்சுகளுக்கும் தீ பரவியது.
அந்த ஆம்புலன்சில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி காயமின்றி உயிர் தப்பி உள்ளனர். முதலில் தீப்பிடித்த ஆம்புலன்சில் கொசுவர்த்திச் சுருள் எரிந்துக் கொண்டிருந்ததாகவும் அந்தக் கொசுவர்த்தி மூலம் தீ பிடித்து அது புழுதிப் புயல் அடித்ததால் பரவியதாகவும் கூறப்படுகிறது.