புதுடெல்லி:

உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம்  தாதமதம் ஆவதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுக்களே காரணம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.


உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு கொண்ட கொலீஜியமே நியமிக்கும் நடைமுறை உள்ளது. தகுதியானவர்கள் பட்டியலை பரிசீலிந்து மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பும்.
அதன்பின்னர் மத்திய அரசும் பரிசீலித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். அதன்பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை குடியரசுத் தலைவர் பிறப்பிப்பார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கொலீஜியம் பரிந்துரைத்த பின்னும், நீதிபதிகள் பட்டியலை இறுதி செய்வதில் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது. இது நீதிமன்ற நிர்வாகத்தில் மத்திய அரசு மறைமுகமாக தலையிடுவதாகும்.

கொலீஜியத்தால் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகளின் பெயர் பட்டியலை மத்திய வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச், “தற்போது நீதிபதிகள் நியமனம் விரைவாகவே நடக்கிறது. எனினும், தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம், 80 நீதிபதி நியமன கோப்புகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளன.
ஆனால், மத்திய அரசிடம் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 27 கோப்புகள்தான் நிலுவையில் உள்ளன.
எனவே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்துக்கு தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியமே காரணம்” என்றது.