டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது: பிரதமர் கூறிய ”சுயசார்பு இந்தியா” சவாலுக்கு நாம் தயாராக வேண்டும். தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் முக்கிய அடிப்படையாகும்.
உலகளவில் பொருளாதாரத்தை மேம்படுத்த சவால்களை சந்திக்க நேரிடும். ஜிஎஸ்டி போன்ற முக்கிய வரி சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவையாகும்.
முதலீடுகளை ஈர்க்கும் திறனை கொண்டே மாநிலங்கள் இனி தரவரிசைப் படுத்தப்படும். அதற்கேற்ப அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர் குழு மூலம் முதலீடுகளுக்கு விரைந்து அனுமதி தரப்படும்.
மத்திய, மாநில அரசுகள், முதலீட்டாளர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்படும். நாடு முழுவதும் தொழிற் பூங்காக்களை அமைப்பதற்காக 5 லட்சம் ஹெக்டர் இடம் தேர்வு செய்யப்படும். அதோடு நாடு முழுவதும் தொழிற்பூங்காக்கள் தர வரிசைப்படுத்தப்படும்.
இனி ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு புதியதாக உருவாக்கப்படும். ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
சில பாதுகாப்பு தளவாடங்கள் மட்டும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும். பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பானது 49% லிருந்து 74% வரை அதிகரிக்கப்படுகிது.
ராணுவ தளவாட உற்பத்திக்கான ஆலைகளை ஒருங்கிணைத்து இணைத்து தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். ஆயுதங்களை இறக்குமதி செய்ய நமக்கு ஏற்படும் செலவுகள் மிச்சமாகும்.
செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும், மேலும் இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்படும் என்று கூறினார்.