நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்பதாக பாடலாசிரியர் வைரமுத்து வர்ணித்த, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுகோய் 30 ரக போர் ஜெட் விமானத்தில் இன்று பறந்தார்.

இதன் மூலம் சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானத்தில் பறந்த இந்தியாவின் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா அடைந்துள்ளார்.

அரசியல்பிரமுகர்களைப் பொறுத்தவரை இதற்கு முன் முன்னாள் ஜனாதிபதிகளான பிரதீபா பாட்டில் மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் மட்டுமே இந்த போர் விமானத்தில் பயணித்திருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து ரக பாதுகாப்பு வாகனங்களில் நிர்மலா சீதாராமன் பயணம் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலில் அரபிக் கடலில் பயணம் செய்து, கடற்படை செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இன்று ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து, சுமார் 45 நிமிடங்கள் போர் விமானத்தில் பயணம் செய்தார் நிர்மலா. சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானம் அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட போர் விமானம் ஆகும்.

இந்த விமானம் எதிரிகளின் பகுதியை துல்லியமாக ஊடுவிச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. சுகோயில் பயணித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா “ இது போன்ற ஒரு அனுபவம் கிடைத்ததை பெருமையாக உணர்கிறேன். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.

போர் விமானங்களின் நடைமுறை செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக தான் இந்த பயணத்தை மேற்கொண்டேன். போர் வந்தால் எதிர்கொள்வதற்கு நாம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம்.. பாதுகாப்பு வீரர்கள் எவ்வளவு விரைவாக செயல்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் இது மறக்கமுடியாத அனுபவம்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.