புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது தவறான தகவல் என ‘நியூஸ் சென்ட்ரல்’ இணையம் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.


சனிக்கிழமையன்று புதுடெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2014-ல் நரேந்திர மோடி பிரதமரான பின் நாடு முழுவதும் எங்கும் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறியிருந்தார்.

அமைதியை நிலை நாட்டுவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இது குறித்து’நியூஸ் சென்ட்ரல்’ இணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ” பாதுகாப்பு அமைச்சரின் இந்த பேச்சு உண்மையா? கடந்த 2014-க்குப் பிறகு மோடி பதவிக்கு வந்ததும், பல முறை தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன என்று பட்டியலிட்டுள்ளது.

1. குர்தாஸ்பூர்:  2015-ம் ஆண்டு ஜுலை மாதம் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தினா நகரில் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் காவல் கண்காணிப்பாளரும் அடங்குவார். இந்த தாக்குலால் தினா நகரம் காஷ்மீர் போன்று காணப்பட்டது.

2.பத்தன்கோட்:  2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டில் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் என சந்தேகிக்கப்படுபவர்கள் பத்தன்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, விமான தளத்தை தாக்கி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியை ஆயுதப் படையினர் முறியடித்ததாக பாராட்டினார்.

நாட்டின் பாதுகாப்பையே அவமதிக்கும் வகையில் நடந்த இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்புக்கு பாஜக அரசு உத்தரவிட்டது.

3.கோக்ராஜர்:  அசாமில் உள்ள கோக்ராஜர் மார்க்கெட்டில் தேசிய ஜனநாயக போடோ முன்னணியுடன் சேர்ந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

4. யூரி:  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள யூரி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பத்தான்கோட் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். இது குறித்து நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தண்டிக்காமல் விடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன் என்றார்.

5. அமர்நாத்: கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் காஷ்மீர் மாநிலம் ஆனந்நாக் அமர்நாத் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, இதுபோன்ற கோழைத்தனமான தாக்குலை இந்திய ஒரு போதும் பொறுக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.

நிலைமை இப்படியிருக்க, மோடி பிரதமர் ஆனதும் தீவிரவாத தாக்குதலே நடக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது உண்மையா? என நியூஸ் சென்டர் இணையம் கேள்வி எழுப்பியுள்ளது.