பெங்களுரு: பாஜகவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆகியோர் மார்ச் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதைதொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணைமுதல்வர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமாரும் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையில், 2023 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அன்றைய பாஜக அரசுக்கு எதிரான 40 சதவீதம் கமிஷன் என்ற குற்றச்சாட்டு கூறி காங்கிரஸ் வெளியிட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட, பாஜக தலைவர்களுக்கு எதிராக ஊடகங்களில், கரப்ஷன் ரேட் உட்பட பலவிதமான விளம்பரங்களை காங்கிரஸ் வெளியிட்டது .இதன்முலம் காங்கிரஸ் கட்சி மக்களிடையே பிரசாரம் செய்தது பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அரசியல்க ளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
. தேர்தல் நேரத்தில் இத்தகைய விளம்பரம் வெளியிட்டதால், தலைமை தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதுபோல, சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பாஜகவின் கவுரவம் பாதிக்கப்பட்டது, மேலும் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெங்களூரு நீதிமன்றத்தில், பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, மார்ச் 28ல் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிபதி ஜே.பிரீத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.