சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் வடஇந்திய பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர்மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். தயாநிதி மாறன் மீது இந்திய தண்டனைச் சட்டம், 2023 இன் பிரிவுகள் 74, 75, 79, 192, 298, 352 மற்றும் 251(2) இன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  வட இந்தியாவில் பெண்களை சமையலறையிலும், குழந்தை களுடனும் இருக்கச் சொல்கிறார்கள்: திமுக எம்.பி. தயாநிதி மாறன். ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் பெண்களைப் படிக்கச் சொல்கிறோம்,” என்று கூறினார். இது வடஇந்திய பெண்களை இழிவுபடுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து,  க பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, தயாநிதி மாறனுக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். நீதிமன்றம் புகாரை ஏற்றுக்கொண்டு அடுத்த விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதுதொடர்பாக,  வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா அளித்த புகாரில், “ஜனவரி 15-ஆம் தேதி ஒளிபரப்பான ஒரு செய்தியில், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வட இந்தியாவில் பெண்கள் குறித்து மோசமான மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டார். வட இந்தியாவில் பெண்கள் சமைப்பதற்கும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பெண்கள் படிக்கவும் முன்னேறவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் தயாநிதி மாறன் கூறியுள்ளதாக காணொலிகள் வெளியாகி உள்ளன.

இது வட இந்திய பெண்களின் கண்ணியம் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் வட இந்தியாவில் பெண் சமூகத்தை புண்படுத்தியுள்ளது. அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், “தயாநிதி மாறனின் கருத்து பெண்களை அவமதிப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு இடையிலான மக்களிடத்தில் நிலவும் சகோதர பந்தத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கையால் நான் மனரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளேன். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறோம்” என்று வழக்கறிஞர் சுதிர் குமார் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மம் குறித்து திமுக தலைவர்கள் முன்பு சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதுபோன்ற அறிக்கைகள் வேண்டுமென்றே வெளியிடப்படுவதாகவும் வழக்கறிஞர் தன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், தயாநிதி மாறன் மீது இந்திய தண்டனைச் சட்டம், 2023 இன் பிரிவுகள் 74, 75, 79, 192, 298, 352 மற்றும் 251(2) இன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜனவரி 22 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக எம்.பி. தயாநிதி மாறன், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற சித்தாந்தத்துடன் செயல்படும் ஒரு ‘திராவிட மாடல்’ அரசு என்று  கூறியவர்,  தமிழ்நாட்டில் உள்ள மாணவிகளும் மாணவர்களும் மாநில அரசால் வழங்கப்படும் மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்டு, நம்பிக்கையுடன் நேர்காணல்களை எதிர்கொள்ள வேண்டும் அல்லது முதுகலைப் படிப்பில் சேர வேண்டும்  என்று  கூறினார்.

“தமிழ்நாட்டில் நாங்கள் பெண்களைப் படிக்கச் சொல்கிறோம். ஆனால், வட இந்தியாவில் என்ன சொல்கிறார்கள்? பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும், சமையலறையில் இருக்க வேண்டும், குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும், இதுதான் உங்கள் வேலை என்று சொல்கிறார்கள்,” என்று மாறன் குறிப்பிட்டார்.

[youtube-feed feed=1]