டில்லி:

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாரான வெங்கைய நாயுடுவை எதிர்த்து வரும் 5ம் தேதி நடக்கும் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியி டுகிறார்.

இவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ நாட்டில் தற்போது மாடு விழிப்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள கூடிய விஷயம்.

நேரடி மற்றும் மறைமுக அடக்குமுறை, மதவெறி, சகிப்புதன்மையும் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இது ஜனநாயகமும் கிடையாது. குடியரசும் கிடையாது. வாக்காளர்கள் தங்களது வாக்கை தகுதியானதாக ஆ க்க வேண்டும் என்பதற்காக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். அதோடு பல கட்சிகளின் அழைப்பை ஏற்று குடியரசு அரசியலமைப்புக்கு மதிப்பளிக்கும் நோக்கத்தோடு போட்டியிடுகிறேன்’’ என்றார்.

எம்.பி.க்கள் எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வெங்கைய நாயுடு குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர். பொது விவகாரங்களில் நல்ல அனுபவம் கொணடவர். நான் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களிடம் ஓட்டு கேட்கவில்லை. எனது தகுதியின் மீது கவனம் செலுத்துங்கள் என்று தான் கேட்டுள்ளேன்.

என்னை எதிரியாக பார்க்க வேண்டாம். நாட்டின் இறையாண்மை, பண்முகத்தன்மை, ஜனநாயக உரிமைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு குடிமகனுக்கு வாய்ப்பு வழங்கும்படிதான் கேட்டுள்ளேன். மதிப்பில்லாத வெற்றி, தோல்விக்கு மத்தியில் சில போட்டிகள் மதிப்புமிக்கதாக இருக்கும்’’ என்றார்.

தேர்தலில் வெற்றி பெற வில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,‘‘ தேர்தல்களை விட வாழ்க்கை பெரியது’’ என்றார்.

மேலும், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக தனது மருமகன் ஸ்ரீகிருஷ்ணா குல்கர்னி எழுதியிருந்த திறந்த மடலுக்கு கோபால்தாஸ் காந்தி பதில் கூற மறுத்துவிட்டார்.

2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு எதிர்கட்சிகளின் செயல்பாடு எப்படி உள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,‘‘ மக்கள் இந்த வாய்ப்பை புத்திசாளித்தனமான முறையில் பயன்படுத்துவார்கள். சுதந்திரம் மற்றும் நேர்மையான முறையில் நடத்தப்படும் ஒவ்வொரு தேர்தலும் ஒரு வெற்றியே’’ என்றார்.

2019ம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் ராகுல்காந்தியை மையம் கொண்டிருக்குமா என்று கேட்டதற்கு, ‘‘ மக்களை மையம் கொண்டதாக தான் இருக்கும்’’ என்றார்.