சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில்பட்டாசு விற்பனை இன்று மாலை தொடங்குகிறது.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க பல மாநிலங்கள் தடை போட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில் பட்டாசு விற்பனைக்காக, எப்போதும்போல தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியது.
அதன்படி, இந்த ஆண்டு குறைந்த அளவிலான கடைகளே அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு 80 கடைகள் அமைக்கப்பட்ட் நிலையில், நடப்பாண்டில், கொரோனா பாதிப்பு காரணமாக கடைகளின் எண்ணிக்கை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்றி, பட்டாசு வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை இன்று மாலை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், பட்டாசு கடைகளுக்கான உரிமம் இன்னும் வியாபாரிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் திட்டமிட்டப்படி தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.