திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழககம். நடப்பாண்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெற்றது. அண்ணாமலையார் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைக்க, இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்வான “டிசம்பர் 3ல் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் .
பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வைகாண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தருவர். தீபத் திருவிழாவில் கலந்துகொள்வது கோடி புண்ணியத்திற்குச் சமம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால், அன்றைய தினம் ஏராளமான மக்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை புரிவார்கள். அதனால் அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை சென்று வர வசதியாக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மட்டும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 சொகுசு, ‘ஏசி’ பேருந்துகள், டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் இயக்கப்படும்.
இதேபோல, நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவையில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சொகுசு மற்றும் படுக்கை வசதி உள்ள ‘ஏசி’ சொகுசு பேருந்துகள், டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன. மொத்தம், 200க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணியர் www.tnstc.in மற்றும் அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். பேருந்துகள் இயக்கம் குறித்து மதுரை – 94450 14426, திருநெல்வேலி – 94450 14428, நாகர்கோவில் – 94450 14432, துாத்துக்குடி – 94450 14430, கோவை – 94450 14435, சென்னை – 94450 14463, 94450 14424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.