நியூஸ்பாண்ட்:  

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, பொதுக்குழு உறுப்பினரர்களால் வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டார் அல்லவா?  இனி எந்தப் பிரச்சினை இல்லை என்று நம்புகிறது அவரது தரப்பு.

“சசிகலாவை எதிர்த்து பேசிவரும், ஜெ. அண்ணன் மகள் தீபா, இனி அமைதியாகவிடுவார் என்பது அவர்களது எண்ணம்.

“ஆனால், பா.ஜ.க. மேலிடம் வேறு திட்டத்தில் இருக்கிறது” என்கிறது டில்லி தகவல். அங்கு பேசப்படும் தகவல்கள் இவைதான்:

“களத்தில் குதிக்க வேண்டும் என்பதில் முன்னைவிட தீவிரமாக இருக்கிறார் தீபா. தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓ.பி.எஸ். – தீபா

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை விரும்பாத அ.தி.மு.க. தலைகளும் மறைமுகமாக தீபாவுக்கு ஆதரவும் ஆலோசனையும் அளித்துவருகிறார்கள்.

மிக முக்கியமாக… ஆந்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரும், பா.ஜ.க. ஆதரவு “ஆடிட்ட பத்திரிகையாளரும்” தீபாவுக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.

ஆகவே, அவரை பாஜக மறைமுகமாக ஆதரிக்கும்.தகுந்த பாதுகாப்பும் வழங்கும்…. இப்போது போலவே!

தீபா, முதற்கட்டமாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை தனது ஆளுகைக்கு கொண்டுவர சட்டப்போராட்டத்தில் கவனம் செலுத்தப்போகிறார். அந்த இல்லம், ஜெயலலிதாவின் அம்மா பெயரில் இருக்கிறது. தாத்தா – பாட்டி சொத்து பேரப்பிள்ளைகளுக்கு என்கிறது சட்டம். எனவே, போயஸ் இல்லம், எப்படியும் தீபாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த சட்டப்போராட்டத்துக்கு, பாஜக பக்கபலமாக நிற்கும். (வழக்கம்போல, மறைமுகமாகவே!)

இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்வது நிச்சயம் என்று நம்புகிறது பாஜக.

அந்த நேரத்தில், போயஸ் இல்லத்துக்கு தீபாவை கொண்டுவந்து, தினமும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்க வைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தீபாவுக்கு ஆதரவு பெருகும்.

தற்போது சசிகலாவை ஆதரிக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களும், தீபாவின் பின்னால் அணிவகுப்பார்கள்.

இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கலாம். வேறு ஒருவரை  பொதுச்செயலாளராக நியமிக்கலாம்.

சொல்பேச்சு கேட்பவர்களுக்குத்தான் அ.தி.மு.க.வில் பஞ்சமே இல்லையே!

மொத்தத்தில்,“கட்சிக்கு தீபா.. ஆட்சிக்கு ஓ.பி.எஸ்.” என்பதே பா.ஜ.க.வின் திட்டம்!”

இந்தத் திட்டத்தை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் விரும்புவார்.  தீபாவின் அரசியல் வளர்ச்சிக்கு அவரும் கை கொடுப்பார். விரைவில் இது நடக்கும்.

அதுவரை?

சசிகலாவை அதே பணிவோடு வணங்கி வருவார் ஓ.பி.எஸ்.! “

“– இதுதான் டில்லியில் பரவி வரும் பகீர் தகவல்.