சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கிவரும் நிலையில் சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 14ந்தேதி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று ( நவம்பர் 25) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாளை, , மற்றும் நாளை மறுதினம் (நவ. 26, 27 ஆகிய தேதிகளில் ) அதன் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கிவரும் நிலையில் சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி உள்பட ஒன்பது துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திங்கள்கிழமை வலுப்பெற்றது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஞாயிற்றுக்கிழமை வலுப்பெற்றது.
இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (நவ. 25) காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 27-இல் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரஞ்ச் எச்சரிக்கை சிவப்பு எச்சரிக்கையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ. 27, 28, 29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.