சென்னை: ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்‍கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்‍கூடும் என சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்‍குறிப்பில், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இதன் காரணமாக, நாளை வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வருகிற 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் .

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் வருகிற 12 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும். ஆந்திரா கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.