
கோவிட்-19 தொடர்பைக் கண்டறிவதற்காக தற்போதைய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்யா சேது செயலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளன.
இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த செயலியை, அரசின் ஆதரவாளர்கள் வழக்கம்போல் ஆதரிக்க, சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்த்துள்ளனர். இந்த செயலியை அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், பயனர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும், இந்த செயலியால் ஏற்படும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவலை எழுப்புகின்றனர்.
இது செயலாற்றுவது எப்படி?
மொபைலின் புளூடூத் மற்றும் இருப்பிடத் தரவைப் பயன்படுத்தி, ஆரோக்ய சேது செயலியானது, டேட்டாபேஸை ஸ்கேன் செய்து, ஒருவர், கொரோனா தொற்று ஏற்பட்டவரின் அருகில் நிற்கிறாரா என்பதை அறிய உதவுகிறது.
அந்தத் தரவு பின்னர் அரசிடம் பகிரப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை நீங்கள் கடந்த 2 வாரங்களுக்குள் சந்தித்திருந்தால், பலவித சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், உங்களுக்கும் அந்த வைரஸ் தொற்றுவதற்கான அபாயங்களை இந்த வைரஸ் மதிப்பிடும்.
உங்களின் பெயரும், மொபைல் எண்ணும் வெளியில் பகிரப்படாத அதேநேரத்தில், இந்தத் தகவலுடன், உங்கள் பாலினம், பயண வரலாறு மற்றும் நீங்கள் புகைப்பிடிப்பவரா? போன்ற விபரங்களை இந்த செயலி சேகரிக்கும்.
கட்டாயம்
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் அனைத்து குடிமக்கள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் ஆகிய அனைவரும், இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் நொய்டா பகுதியில், இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தவறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸொமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களும், தங்கள் அனைத்து ஊழியர்களும் இதைப் பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளன.
இந்த செயலி தொடர்பான முக்கிய கவலைகள்
ஆரோக்யா சேது செயலி, இருப்பிடத் தரவை சேகரிக்கிறது மற்றும் மொபைலின் தொடர்ச்சியான புளூடூத் அணுகல் தேவைப்படுகிறது. இதன்மூலம் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சார்ந்த விஷயங்களில் கேள்வி எழுகிறது.
அதேசமயம், இந்தச் செயலியை உருவாக்கியவர்களோ, இது பயனர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாது என்கின்றனர். அதாவது, எந்த மூன்றாம் தரப்பும் ஒருவரின் தரவை அணுக முடியாது என்கிறார்கள் அவர்கள்.
இந்தச் செயலியானது, ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டறிகிறது என்பதுதான் இதுதொடர்பான மிகப்பெரிய கவலை. அதாவது, ஒருவர் யாருடன் தொடர்பில் இருக்கிறார் மற்றும் அவரின் தொடர்ச்சியான இடப்பெயர்வைக் கண்டறிதலானது மிக மோசமான தனியுரிமை மீறலாகும் என்ற விமர்சனங்கள் எழுகின்றன.
தனியுரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள்
இந்தச் செயலியின் மூலம் அரசு அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான மற்றும் அரசால் இயக்கப்படும் சர்வரில் சேகரிக்கப்பட்டத் தகவல்களை பதிவேற்றி, அந்தத் தகவல்களை கோவிட்-19 தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால், தனிநபர் தொடர்பாக திரட்டப்பட்ட இந்தத் தகவல்களை, அரசு விரும்பினால் யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம் என்பதுதான் மென்பொருள் சுதந்திர சட்ட மையம், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மாணாக்கர்கள் உள்ளிட்ட பலதரப்பாரின் கவலையாக உள்ளது.
அதேசமயம், இதை ஆதரிக்கும் குழுவினர், ஆதார் போன்ற உலகின் மிகப்பெரிய தனியுரிமைத் தகவலையே சிறப்பாக பாதுகாக்கும் வரலாறு இந்த நாட்டிற்கு உண்டு. எனவே, ஆரோக்யா சேது செயலி குறித்து அஞ்ச வேண்டியதில்லை என்கின்றனர்.
ஆனால், ஆதார் தகவல்கள் திருடு போவது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் இருந்து வருதையும் மறுக்க முடியாது. மத்திய அரசின் சார்பில், தனியுரிமை என்பது அடிப்படை உரிமையல்ல என்று நீதிமன்றத்தில் வாதாடப்பட்டதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel