சென்னை:  ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் பதிவுத்துறை அலுவலர்களக்க பத்திரப்பதிவு துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுஉள்ளார்.

தமிழகம் முழுவதும்  575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது.  பத்திரப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களை கூறி பதிவு செய்யப்படும் ஆவணங்களை திருப்பி தராமல் சார்பதிவாளர்கள் இழுத்தடிப்பதாகவும் புகார் எழுந்தது.

மேலும், இந்த அலுவலகங்களில்தான் பதிவின்போது உரிய விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்வதில் குளறுபடி, அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரம் பதிவு செய்வதாக பல அலுவலகங்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, நிலுவையில் உள்ள ஆவணங்கள் குறித்து தகவல் பெற்றவர்,  பத்திரப்பதிவு தொடர்பாக புதிய நடவடிக்கைகளை  ஐஜி சிவன் அருள் அறிவித்து உள்ளார்.

அதன்படி, பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று ப உத்தரவிட்டு இருப்பதுடன்,  மாநிலம் முழுவது நிலுவையில் உள்ள 3703 ஆவணங்களை  அடுத்த 15 நாட்களில் முடிக்க அறிவுரை வழங்கி உள்ளார்.  நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைக்க டிஐஜிக்கள் தங்கள் மண்டலத்துக்குட்பட்ட அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் நேரில் ஆய்வு மேற்கொள்ளவும், 15 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் முழு வடிவில் இருந்தால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அந்த ஆவணங்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்கள், சார்பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சார்பதிவாளர்கள் விடுப்பில் சென்றால் கூட நிர்வாக சார்பதிவாளர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருவதாகவும் (14-072021), சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களுக்கு பதிலாக நிர்வாக பணிகளில் உள்ள சார்பதிவாளர்களை பதிவுப்பணியில் ஈடுபடுத்தவும் மண்டல டிஐஜிக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சார்பதிவாளர்கள் காலை 10 மணிமுதல் பதிவுப் பணிக்கு தயாராக பதிவு அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து பணிபுரிய வேண்டும். சார்பதிவாளர்கள் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும். புகார்கள் வந்தால் தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் மிகுந்த மரியாதையுடன் திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலுவையில் உள்ள ஆவணங்கள் விவரம்:

சென்னை மண்டலத்தில் 2091 ஆவணங்கள், வேலூர் மண்டலத்தில் 286 ஆவணங்கள், மதுரை, சேலம் மண்டலத்தில் 274 ஆவணங்கள், கோவை மண்டலத்தில் 232 ஆவணங்கள், நெல்லை மண்டலத்தில் 206 ஆவணங்களும், திருச்சி மண்டலத்தில் 160 ஆவணங்கள், கடலூர் மண்டலத்தில் 135 ஆவணங்கள், தஞ்சாவூர் 45 ஆவணங்கள் என மொத்தம் 3.703 ஆவணங்கள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.