ந்தியாவில் மாருதி கார் தொழிற்சாலை உருவாக காரணமானவரும், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின்  இளைய மகன்  சஞ்சய் காந்தி பிறந்த தினம் இன்று…

சஞ்சய்காந்தி 1946ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி அன்று இந்திராகாந்தி பெரோஸ் காந்தியின் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்ததார். 1வது வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை தனது சகோதரர் ராஜீவ் உடன்  வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்சய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, டெல்லியில் பயின்றார்.

படிப்பில் ஆர்வம் இல்லாத சஞ்சய், செல்வந்தர்கசளின் வீட்டுப் பிள்ளைகள் தங்கி படிக்கும் டேராடூனில் உள்ள டூன் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் அடிக்கடி உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து அழைத்து வரப்பட்டார்.

சஞ்சய்க்கு படிப்பைவிட விலங்குகளிடமும், பறவைகளிடமும் அலாதி பிரியம் உண்டு. இதற்காக  அவரது தாத்தா நேரு,  தங்களது பாரம்பரிய பங்களாவான அலகாபாத் தீன் மூர்த்தி பவனில் ‘குட்டி மிருகக் காட்சி சாலை’யை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி,  கார்கள் மீது சஞ்சய்க்கு கொள்ளைப்பிரியம். எங்கே காரைப் பார்த்தாலும் அதற்குள் சென்று ஆராய்ந்து பார்க்க ஆசைப்பட்டார்.

இதற்கிடையில்,  இந்திராவுக்கும் அவரது கணவர் பெரோஸ்காந்திக்கும் முட்டல் மோதல்கள் ஏற்பட்டன.  இந்த நிலையில்,  சஞ்சய்க்கு 14 வயதிருக்கும் போது பெரோஸ் மாரடைப்பால் திடீரென இறந்து போனார். இந்தக் காலக்கட்டத்தில், எப்போதும் அம்மா பிள்ளையாகவே வளர்ந்த சஞ்சய்க்கு கார் மீதான ஆர்வம் கிட்டதட்ட வெறியாகவே மாறிவிட்டிருந்தது.
பள்ளிக் கூட வயதிலேயே கார் ஓட்ட கற்றுக்கொண்டதுடன், பார்க்கிற கார்களில் எல்லாம் ஏறி ஒரு சுற்று வர வேண்டும் என்ற ஆசையும் அவரது மனதில் மரமாக வளர்ந்தது.
பழைய கார்களை வாங்கி,  அவற்றைப் பிரித்துப்போட்டு, புது உதிரி பாகங்களைச் சேர்த்து மீண்டும் ஓட வைக்கும் வேலைகளில் இறங்கினார். இதனால் பணமும் தண்ணீராக செலவழிந்தது.
கடந்த 1964-ம் ஆண்டு டெல்லியில், ராணுவ அதிகாரி ஒருவரின்  கார் காணாமல் போனது. ஆனால், அந்தநாளே டெல்லி பாலம் விமான நிலையம் (இப்போது இந்திராகாந்தி விமான நிலையம்) அருகே கண்டெடுக்கப்பட்டது. அதனுள்  இளைஞன் மது போதையில் மயங்கிக் கிடந்தான்.  அவனை விசாரித்ததில், அவன் சஞ்சயின் நெருங்கிய நண்பன் என்பதும், இந்திரா காந்தியின் ஆதர்ச நண்பர் முகமது யூனுசின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதனால், இந்த பிரச்சினை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இதை பத்திரிகை ஒன்று மோப்பம் பிடித்து செய்தியாக்கி விட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்திராவுக்கு தர்மச்சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
இநத் நிலையில,  சஞ்சயின் கார் கனவுகளை அடுத்தக் கட்டத்திற்கு சென்றது.  ‘என் முயற்சியில் புதிய கார் தயாரிக்க வேண்டும்’ என்று நண்பர்கள், அம்மா இந்திரா, அண்ணன் ராஜீவ், தாத்தா நேரு என எல்லாரிடமும் சொல்லி வந்தார். பேரனின் ஆசையை நிறைவேற்ற சஞ்சய் பொறியியல் படிக்க வேண்டும் என சஞ்சய்க்கு ஆலோசனை நடத்தினார். ஆனால், சஞ்சய் ஏற்க மறுத்ததுடன்,  கார் தொழிற் சாலையில் பயிற்சி எடுத்தால் போதும்; கார் தயாரித்து விடலாம்’  என்று நம்பிக்கை கொண்டார். அதையடுத்து, கார் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்.
நேருவின் நண்பரான கப்பல் அதிபர் தரம் தேஜா மூலம் இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் தொழிற்சாலையில் மூன்றாண்டு பயிற்சிப் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான்,   1964 மே மாதம் நேரு திடீரென மரணமடைந்தார். இதனால் கட்டவிழ்த்துவிட்ட காளையான சஞ்சய், இங்கிலாந்துக்கு சென்றார்.  பல நண்பர்கள் மூலம் ஏராளமான கார்களை வாங்கி ஓட்டியதுடன், பல்வேறு பிரச்சினைகளிலும் சிக்கினார். இதனால் தூதரகஅதிகாரிகளுக்கும் பல சிக்கல்கள் எழுந்தன. 1966 டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் போதையில் தாறுமாறாக கார் ஓட்டியதாக சஞ்சய் காந்தியைக் கைது செய்தது இங்கிலாந்து போலீஸ். இதையடுதது, சஞ்சய் பயிற்சியை தொடர முடியாமல் இந்தியா திரும்பினார்.
அதற்குள் இந்தியாவில்,  நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி யின் அமைச்சரவையில் அங்கம் வகித்த இந்திரா காந்தி, சாஸ்திரி மறைவுக்குப் பின் இந்தியாவின் பிரதமராகி இருந்தார். இதனால் சஞ்சயின் வருகை பிரமாண்டப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்துதான், தனது கனவை நிறைவேற்ற சஞ்சய் முயற்சி மேற்கொண்டார்.  ஜப்பானில் உள்ளதைப்போல சிறிய கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என விரும்பினார். ஏற்கனவே இந்தியாவிலும் சிறிய ரக கார்களை  தயாரிக்கலாம் என்ற சிந்தனை  ஏற்பட்டு, ழே வடிவம் பெறாமல் நின்று போய் இருந்தது. அதை மீண்டும் தட்டி எழுப்பிய சஞ்சய் கார் தயாரிப்பு உரிமம் பெறுவதற்காக  விண்ணப்பித்தார். தனது கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘மாருதி லிமிடெட்’ என்று பெயரிட்டார்.

இதற்கிடையில், 1974-ம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில்  போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அது,  அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின.

1975-ம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப்படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். இந்த காலக்கட்டத்தில்,  இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்சய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது.

அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது.  பின்னர், 1979 ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின.

அதையடுத்து, 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர்.

இதையடுத்து, சஞ்சய் காந்தியின் கனவு நிறைவேறத் தொடங்கியது.  1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி நிறுவனம் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. மாருதி நிறுவனம் சுசுகி அல்டோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி 800 காரை தான் முதன் முதலில் வெளியிட்டது. இந்த மாடல் வெளியிடப்படும் போது  இதுதான் மாடர்ன் காராக இருந்தது. மேலும் அப்போது போட்டிக்கு ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் மற்றும் பிரீமியர் பத்மினி என இரண்டே மாடல்கள் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

37 ஆண்டுகளுக்கு முன்பு மாருதி என்ற சிறிய ரக காரை இந்தியாவில் தயாரிக்க காரணமாக அமைந்த, மறைந்த சஞ்சய்காந்தியின் பிறந்த தினம் இன்று. மாருதி உள்ள வரை சஞ்சயின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.