திரானா: அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
அல்பேனியா நாட்டின் மேற்கு பகுதியான டுராசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. அதன் தாக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர்.
அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் இரவு முழுவதும் கழித்தனர். பலர் வீடுகளுக்கு செல்ல பயந்து வீதிகளில் இருந்து கார்களில் உறங்கினர். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்றன. நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்களில் மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
600க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மற்றும் சேதங்கள் அதிகமாக இருப்பதால், தேசிய அளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடுமையான நிலநடுக்கம் என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்பேனியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. உதவிகளை செய்ய காத்திருப்பதாக அமெரிக்காவும் அறிவித்துள்ளது.