கொழும்பு

லங்கை நகரில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 450 ஆகவும் ஆனது.

இலங்கையில் கொழும்பு நகரில் இன்று காலை 8.45 மணி முதல் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் இவ்வாறு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறை ஊடக செய்தியாளர், “தற்போதுள்ள நிலையில் எங்களால் ஒவ்வொரு இடங்களிலும் மரணமடைந்தோர் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியவில்லை. நாங்கள் ஒரு இடத்தில் பணி புரியும் போது மற்றொரு இடத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆகவே மீட்புப் பணிகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.” என தெரிவித்தார்.

தற்போதைய தகவலின்படி இந்த குண்டு வெடிப்பில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆகவும் காயமடைந்தோர் என்ணிக்கை 450 ஆகவும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவு செயலர் ரவிநாத ஆர்யசிம்ஹா, “இறந்தவர்களில் 27 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். இதை தவிர 5 வெளிநாட்டினர் காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

இறந்த வெளிநாட்டவர் எந்த எந்த நாட்டினர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.