கொழும்பு:

குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கப்போகும் தகவல் தெரிந்தும், முன் எச்சரிக்கை
நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளின் ஆதரவுடன் தீவிரவாத தாக்குதல் நடந்ததா என்பது குறித்து தெரிந்தபின்தான், வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்கவேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, தாக்குதல் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவரும் என்றார்.

எனினும், தனக்கு தெரிந்தவரையில் இந்த தாக்குதலில் உள்ளூரைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்றே தெரிகிறது என்றார்.

இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், மேலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் கைகோர்க்கும் நேரம் வந்துள்ளதாக தெரிவித்த அவர், அனைவரும் இணைந்து தீவிரவாதத்தை விரட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பங்களில், 35 வெளிநாட்டினர் உட்பட 218 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறிய ரனில் விக்கிரமசிங்கே, தாக்குதல் நடக்கப் போவது அரசுக்கு தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

இதற்கிடையே, இலங்கையின் தேசிய மருத்துவனை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்கா,டென்மார்க்,சீனா, ஜப்பான்,பாகிஸ்தான்,மொராக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 35 வெளிநாட்டினர் வெடிகுண்டு சம்பவத்தில் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.