காபூல்
ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவித்து உள்ளது. அடுத்தடுத்து 8 முறை ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
இவ்வாறு தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களிலிருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர். நேற்று வரை நில நடுக்கத்தில் 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.
சுமார் 1,000- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஜிந்தா ஜன் மாவட்டத்தின் 3 கிராமங்களில் மட்டும் 15 பேர் இறந்து 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல வீடுகள் பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் முற்றிலும் அழிந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியின் போது சடலங்களாக வந்து கொண்டு இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது நிலநடுக்கத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்து உள்ளதாக தலீபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவிர 1,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.