குவெட்டா
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நவம்பர் 9 ஆம் தேதி அன்று நிகழ்ந்து பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 14 ராணுவ வீரர்கள் 13 பேர் பொதுமக்கள் ஆவர்.
சுமார் 60க்கும் மேற்பட்டோர காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணுவ வீரர்கள் குவெட்டா ரயில் நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது தெரியவந்தது. மேலும் பயங்கரவாதி ஒருவா் தன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளதும் தெரியவந்து அவரின் உடலும் அடையாளம் காணப்பட்டது. பலுசிஸ்தான் விடுதலை படை என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு, பொறுப்பேற்றுள்ளது.