காஷ்மீருக்கு எப்போது வர வேண்டும்? ஆளுநர் மாலிக்குக்கு ராகுல் கேள்வி

Must read

டில்லி:

காஷ்மீருக்கு எப்போது வர வேண்டும்? என்று காஷ்மீர் மாநில ஆளுநர் மாலிக்குக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பல்லாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்துக்கு  வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை  இரண்டு  யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின்  கீழும் மாற்றி நடவடிக்கை எடுத்தது.

இதற்கு காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

காஷ்மீர் நிலவரத்தை காணச் சென்ற  சென்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட  நிலையில்,  அரசின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாது.

இதையடுத்து, செய்தி வெளியிட்ட மாநில கவர்னர் சத்யபால் மாலிக், காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை விமானத்தில் அழைத்து சென்று காஷ்மீரை காண்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கூறிய ராகுல்,  “ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். எங்களுக்கு விமானம் தேவை  இல்லை மாறாக காஷ்மீருக்குள் சுதந்திரமாக பயணம் செய்ய எங்களை அனுமதித்தால் போதுமானது” எனப் பதில் அளித்திருந்தார்.

ராகுலின் கேள்விக்கு இதுவரை காஷ்மீர் மாநில ஆளுநரிடம் இருந்து பதில் வராத நிலையில், அவருக்கு மீண்டும் ராகுல்காந்தி நினைவூட்டல் செய்துள்ளார்.

அதில்,

அன்புள்ள  மாலிக்ஜி,

எனது டிவீட்டுக்கு உங்கள் பலவீனமான பதிலைக் கண்டேன்.

ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று மக்களைச் சந்திக்க உங்கள் அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், எந்த நிபந்தனைகளும் இல்லை.

நான் எப்போது வர முடியும்?

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More articles

Latest article