டில்லி:

நிதி அமைச்சர் அவர்களே! இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் – ஐந்து கோடி ஏழைகளுக்கான திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று தெரிவித்தார். நிதி ஒழுங்கு வரம்புகளுக்கு உட்பட்டு இந்தத் திட்டத்தை நாங்கள் நிறைவேற்று வோம் என்று கூறியிருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ராகுல்காந்தியின் அறிவிப்பு குறித்து, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், பாஜக அரசுக்கும், நிதி அமைச்சருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அதில், ஐந்து கோடி ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச வருமானத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். எல்லோருக்கும் மகிழ்ச்சி!

பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்ய முடியும், இதனைக் காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.

அதாவது ஆண்டுக்கு ரூ72,000 ரொக்கமாக வழங்கப்படும் ஐந்து கோடி ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ6000 ரொக்கமாக வழங்கப்படும்.

நிதி அமைச்சர் அவர்களே! இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் – ஐந்து கோடி ஏழைகளுக்கான திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? என்று  கேள்வி எழுப்பி உள்ளார்.