மத்திய துருக்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின. பல இடங்களில் கட்டிங்கள் நொறுங்கி விழுந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய கிழக்கு துருக்கியின் சில மாகணங்களிலும் இருந்தது. சேத விவரம் இதுவரை வெளியாக வில்லை.
மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பிரிட்டன், லெபனான், ஈராக் உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் காஜியண்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு, “கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலாத்யா, தியார்பாகிர் மாகாணங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பலர் உயிரிழந்திருக்கலாம், பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.