பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

குவெட்டா ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரண்டு முக்கிய ரயில்களில் ஒன்றான ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ஏறுவதற்கு பயணிகள் தயாராகிக் கொண்டிருந்த போது, ​​நெரிசலான நடைமேடையில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

ரயில்வே அதிகாரிகளின் தகவலின்படி, இன்று காலை 9 மணிக்கு பெஷாவர் செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பயணிகள் காத்திருந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

குண்டுவெடிப்பால் பீதியடைந்த மக்கள் உயிர்பிழைக்க நாலாபக்கமும் சிதறி ஓடினர், இதனால் அந்த ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவசரகால மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை குவெட்டா சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது,

இந்த குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கலைக்கிடமான நிலையில் உள்ளதை அடுத்து உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்து வரும் இந்த வன்முறை தொடர்பாக அம்மாநில முதல்வர் கவலை தெரிவித்துள்ள நிலையில், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியவர்கள் “மனிதகுலத்தின் எதிரிகள்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த தாக்குதலை பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.