சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில், SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)-க்கான தேதிகளை 01.01.2026-ஐ தகுதித் தேதியாகக் கொண்டு மேலும் ஒரு வாரம் நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட அட்டவணையை அறிவித்துள்ளது.
நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பெறப்பட்டு அதை பதிவேற்றும் செய்யும் டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவடைய இருந்த கால அவகாசம் தற்போது டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில், எஸ்ஐஆர் விண்ணப்பங்களே முழுமையாக விநியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில், இந்த பணிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்து, திமுக உள்பட பல கட்சிகள் கோரிக்கை வைதத நிலையில், மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால், பொதுமக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை கோரிக்கைகளை முன்வைக்கலாம். அவற்றின் மீது அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி வரை பரிசீலனை செய்யப்பட்டு, கூடுதல் ஆவணங்கள் பெறப்பட்டு, நேரில் சென்று உறுதி செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பின்னர், 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் பல தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதில் சந்தேகங்கள் மற்றும் சிக்கல்கள் இருப்பதால் ஒரு மாத காலத்தில் வாக்காளர் திருத்தப் பணிகளை நடத்தி முடிக்க வாய்ப்பில்லை என்றும், கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், வாக்காளர் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் விளைவாகவே தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.