டில்லி
டில்லி மேம்பாட்டு குழு பாஜக அலுவலகத்துக்கு தேர்தல் விதிகள் நடைமுறக்கு வரும் ஒரு நாள் முன்பு நில ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு நில ஒதுக்கீடு குறித்து டில்லி மேம்பாட்டுக் குழு சில விதிகளை பின்பற்றி வருகிறது. அதன்படி 101 மக்களவை உறுப்பினர் முதல் 200 மக்களவை உறுப்பினர் வரை உள்ள கட்சிகளுக்கு அலுவலகம் 2 ஏக்கர் வரை நிலம் அளிக்கலாம் என கூறப்பட்டது. அதை ஒட்டி பாஜகவுக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2014 ஆம் வருடம் பாஜகவுக்கு அதிக அளவில் மக்களவை உறுப்பினர் இருந்ததால் மேலும் 2 ஏக்கர் நிலம் கோரி பாஜக விண்ணப்பித்தது. ஏற்கனவே டில்லி தீன் தயாள் மார்க் பகுதியில் பாஜகவுக்கு 2 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு இரு ஏக்கர் நிலம் அந்த இடத்துக்கு அருகில் இல்லாததால் பாஜகவுக்கு வேறு இடத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த இடத்துக்கு மாற பாஜக விருப்பம் தெரிவிக்கவில்லை. அந்த இடத்தின் தரை மிகவும் சாய்வாக உள்ளதாக கூறி பாஜக மறுத்து விட்டது. எனவே டில்லி மேம்பாட்டுக் குழு பாஜக தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள நிலத்தை கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தது. அந்த நிலம் வீடுகட்டுமானத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது. அந்த உத்தரவை மாற்ற முடிவு எடுக்கபட்டது.
தேர்தல் வருவதை ஒட்டி டில்லி மேம்பாட்டுக் குழு இந்த வருடம் பிப்ரவரி 21 மற்றும் 25 ஆம் தேதி கூடி இந்த நில ஒதுக்கீட்டை மாற்றி அமைத்தது. அதற்கான உத்தரவு மார்ச் மாதம் 9 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. தற்போது பாஜகவுக்கு 2.22 ஏக்கர் நிலம் ரூ. 2,07, 72,967 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாக அதற்கு அடுத்த நாள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு ஒரு நாள் முன்பு இந்த நில ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது.