சென்னை: தொகுதி நிதியை நான் மக்களுக்கு செலவழிக்கவில்லை என்று வறிய எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடருவதாக அறிவித்துள்ள மத்திய சென்னை எம்.பி. வேட்பாளர் தயாநிதி மாறன், 95% தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன்” என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு அடைந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக கூட்டணி தலைவரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். புரசைவாக்கம் பகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கூறும்போது,
“திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுபவர், (தயாநிதி மாறன்). பணம் படைத்தவர். இந்த தேர்தலைப் பொறுத்தவரை, ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நமது வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இந்தியாவில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர். அவர்களிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது.
திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள். அவர்கள் மக்களையே பார்ப்பது இல்லை. தேர்தல் வந்தால்தான் மக்களைச் சந்திக்கின்றனர். சென்னையில் மிக்ஜாம் புயல் வந்தது. புயல் வந்தது காற்றின் தாக்கம் பெரிதாக இல்லை. சென்னை மாநகரம் தப்பித்துக்கொண்டது. இந்த ஆட்சியில், வர்தா போன்ற புயல் வந்திருந்தால், சென்னையே காணமல் போயிருக்கும். அந்தளவுக்கு மக்கள் துன்பம் அடைந்திருப்பர். சென்னையில் பெய்த ஒருநாள் மழைக்கே, முதல்வர் புலம்பி தீர்த்துவிட்டார். மற்றவர்கள் மீது பழி சுமத்தி முதல்வர் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.
நிர்வாகத் திறமையற்ற, பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால்தான், தமிழக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த மூன்றாண்டு காலத்தில், சென்னை மாநகரட்சிக்கு, அல்லது தமிழகத்துக்காக என்ன செய்திருக்கிறீர்கள். என்ன திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும், அதிமுக அல்லது என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுவார். ஆனால், மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம், அதனால், மக்கள் இந்த நன்மைகளைப் பெற்றனர் என்ற விவரங்களை சொல்வதே கிடையாது. திமுகவின் இந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
ஆனால், நம்முடைய கூட்டணி வேட்பாளர் எளிமையானவர், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருபவர். நமது வேட்பாளர் மக்களின் நன்மைக்காக போட்டியிடுபவர், ஆனால், திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மேலும், சொத்துக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் அவர் போட்டியிடுகிறார். எனவே, மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளர் வேண்டுமா? அல்லது அவருடைய குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் வேட்பாளர் வேண்டுமா? மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியதற்காக அவர்மீது திமுக எம்பியும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியவர், “என் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என்று ஒரு அவதூறை பொய் என்று தெரிந்தே பேசியுள்ளார். எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்றே பேசியுள்ளார். இதுதொடர்பாக, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. அதனால், தான் தற்போது அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு, அடுத்த மாதம் 14ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன்.. இபிஎஸ் தோல்வி விரக்தியில் பேசியுள்ளார். சுய நினைவுடன் தான் அவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. திமுகவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியவேண்டும். என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளேன். எனது பணியை கொச்சைப்படுத்தி, எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.