சென்னை

நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்தரி வெயில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் மே மாதத்தில் வருகிறது.  இது தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. எப்போதும் கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. அதில்ம் சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை  இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. நேற்று  ஈரோட்டில் 11-வது நாளாக 110 டிகிரி வெயில்  பதிவானது.

இது மட்டுமின்றி, கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை இல்லாத வெப்ப அளவு ஊட்டியில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்ற கத்தரி வெயில் காலத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியை தொட்டது அதிகபட்ச வெயில் பதிவாக இருந்தது. இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரோட்டில் 109 டிகிரியை கடந்துவிட்டது.  , இந்த ஆண்டு 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சென்ற 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் 119.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானதுதான் இதுவரை பதிவான உச்சபட்ச வெயில் அளவாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.