திருவனந்தபுரம்: துபாயில் கணவர் இறந்த மறுநாளே கேரளாவில் உள்ள அவரது மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் நிதின். அவரது மனைவி அதிரா. இருவரும் துபாயில் பணியாற்றி வந்தனர். கர்ப்பிணியாக இருந்த அதிரா கடந்த மே மாதம் 7ம் தேதி இந்தியா வந்தார்.
உச்ச நீதிமன்றம் வரை சென்று அதற்கான அனுமதி பெற்று கோழிக்கோடு வந்து சேர்ந்தார். கணவர் பணிபுரிந்ததால், லாக்டவுன் காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள துபாயில் எந்த உறவினரும் இல்லை. எனவே கோழிக்கோட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும் கூறி அதிரா ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றார்.
இந் நிலையில் உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு காரணமாக திடீரென அவர் கணவர் தூக்கத்தில் நேற்று உயிரிழந்தார். மருத்துவர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் இந்த விவரம் அதிராவுக்கு சொல்லப்படவில்லை. அவர் கணவர் இறந்த மறுநாளில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே சமயத்தில் நிதினுக்கு கொரோனா இல்லை என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.
விமானம் கிடைக்கப்பெற்றால், உடல் புதன்கிழமை திருப்பி அனுப்பப்படலாம் என்று அவரது நண்பர் கூறினார். நிதின் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்தபோது, அதிரா ஒரு ஐ.டி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியராக பணிபுரிந்தார்.
நிதின் 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார், அதிரா 2 வருடங்களுக்கு முன்பு அவருடன் சேர்ந்தார். துபாயில் பல்வேறு தன்னார்வப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிதின், கர்ப்பிணிகள் உட்பட எத்தனை வெளிநாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்திருக்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தார். இது எல்லாம் அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு நடந்தது என்பது தான் பெரும் சோகம்.