புதுடெல்லி:
மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மிக முக்கியமான ரவுடியான தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து நவம்பர் 10-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்னகிரி மாவட்டம் கொங்கண் கிராமத்தில் அமைந்துள்ள தாவூத் இப்ராஹிமுடைய மூதாதையரின் ஏழு நிலங்களும் நவம்பர் 10 ஆம் தேதி கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மையத்தின் சார்பாக, அதன் அதிகாரிகள் ஏலம் விடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்தை தவிர, தாவூத் இப்ராஹிமின் மறைந்த நெருங்கிய நண்பரும் உதவியாளருமான இக்பால் மிர்ச்சியின் இரண்டு நிலங்களும் ஒரே நாளில் ஏலம் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து பறிமுதல் சட்டத்தின்கீழ் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், நவம்பர் 10-ஆம் தேதி இந்த சொத்துக்களை ஏலம் விட இருப்பதாகவும், அதனை சரியாக கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், நவம்பர் 2 ஆம் தேதி முதலே சொத்துக்களை ஏலத்தில் எடுக்க நினைப்பவர்கள் அதனை ஆய்வு செய்யலாம் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் அனைத்தையும் இந்த ஆண்டு துவக்கத்தில் ஏலம் விட திட்டமிட்டிருந்ததாகவும், அது மிகவும் தாமதமாகிவிட்டது என்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்